" alt="" aria-hidden="true" />
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரை 125 ஆக இருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 5 ஆயிரத்து 200 பேர் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த புதன்கிழமை கொரோனா வைரசுக்கு பெங்களூரில் ஒருவர் பலியானார். சவுதி அரேபியாவுக்கு சென்று வந்த அவருக்கு காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தன.
கல்புர்கியைச் சேர்ந்த 72 வயதான அவர் மூச்சுவிட திணறிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் உயிரிழக்க நேரிட்டது.
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவரின் மகள் மற்றும் சில நண்பர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் 68 வயது மூதாட்டி கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். மேற்கு டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 8-ந்தேதி கடும் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் கடந்த வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3-வது உயிரிழப்பை இந்தியா சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரு ஆண் உயிரிழந்தார்.
இவர் சமீபத்தில் துபாய் உள்பட வளைகுடா நாடுகளுக்கு சென்று விட்டு மும்பை திரும்பி இருந்தார். ஏற்கனவே பல்வேறு உடல்நல கோளாறுகளால் அவதிப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். என்றாலும் இன்று காலை அவர் உயிரிழந்தார். கொரோனா வைரசால் அவர் உயிரிழந்து இருப்பதாக டாக்டர்கள் இன்று காலை உறுதிப்படுத்தினார்கள்.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி 3-ஆக உயர்ந்துள்ளது.